கிஷோர் குமார்

Kishore-Kumar

இந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த “கிஷோர்தா” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார், தன் குரலால் இசை ரசிகர்களை வசப்படுத்தி பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி சரித்திரம் படைத்தார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும், மற்றும் இயக்குனராகவும் இந்தித் திரைப்பட உலகை வலம்வந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும் விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 04, 1929

இடம்: கந்த்வா, இந்தியா

பணி: பாடகர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர்.

இறப்பு: அக்டோபர் 13, 1987

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

கிஷோர் குமார் அவர்கள், 1929  ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள கந்தவா மாவட்டத்தில் குஞ்சாலால் கங்குலிக்கும், கெளரி தேவிக்கும் மகனாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு “அசோக் குமார்” மற்றும் “அனூப் குமார்” என்ற இரண்டு சகோதரர்களும், சதி தேவி என்ற சகோதரியும் இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை:

கிஷோர் குமார் அவர்கள், குழந்தையாக இருக்கும் பொழுது அவருடைய சகோதரரான அசோக் குமார், பாலிவுட்டில் ஒரு நடிகரானார். பின்னர், அனூப் குமாரும் தன்னைத் திரைப்படத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். தன்னுடைய சகோதரர்களுடன் நேரத்தை செலவிட்ட கிஷோர் குமாருக்கு திரைப்படம் மற்றும் இசைத் துறையில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. நடிகர் மற்றும் பாடகராக புகழ்பெற்று விளங்கிய “குந்தன் லால் சேய்கலை” குருவாக கருதிய கிஷோர் குமார் அவருடைய பாணியிலேயே தன்னுடைய இசைப் பயணத்தையும் தொடர்ந்தார்.

திரைப்பட துறையில் கிஷோர் குமாரின் சாதனைகள்:

அசோக் குமார் இந்தித் திரைப்படத் துறையில் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறிய பிறகு, அவருடைய குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தது. தனது சகோதரர் பணிபுரிந்த மும்பை டாக்கிஸில், கோரஸ் பாடகராக தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய கிஷோர் குமார், 1946ல் அசோக் குமார் கதாநாயகனாக நடித்த “ஷிகாரி” என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர், க்ஹெம்சாந்து பிரகாஷ் என்ற இசையமைப்பாளர் 1948 ல் ‘ஜித்தி’ என்ற திரைப்படத்தில் ‘மர்னே கி துவாயேன் க்யூன் மாங்கூ’ பாடலைப் பாட வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு, அவரைத் தேடி நிறைய வாய்புகள் வர ஆரம்பித்தன. 1951 ஆம் ஆண்டு “அந்தோலன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தாலும், சிறந்த பாடகராக வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். ‘பிமல் ராய் நாகரி’, ‘முஸாஃபிர்’, ‘புது தில்லி’, ‘ஆஷா’, ‘ஹல்ப் டிக்கெட்’, ‘சல்தி கா நாம் காடி’ போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

பாடகராக முத்திரைப் பதித்த கிஷோர் குமார்:

பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, புகழின் உச்சியில் இருந்தவர் கிஷோர் குமார். எஸ்.டி பர்மன் என்ற இசையமைப்பாளரால் தன்னுடைய பாடும் திறமையை வெளிப்படுத்திய கிஷோர் குமார், பின்னர் அவருடைய எல்லாப் படங்களிலும் கிஷோர் குமாருக்குப் பாட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ‘முனிம்ஜி’ (1954),  ‘டாக்சி டிரைவர்’ (1954),  ‘வீட்டு எண் 4’4 (1955), ‘ பன்டுஷ்’ (1956),  ‘நு டு கியார்ஹ்’ (1957), ‘பேயிங் கெஸ்ட்’ (1957),  ‘வழிகாட்டி’ (1965),  ‘ஜுவல் தீப்’ (1967),  மற்றும் ‘பிரேம் புஜாரி’ (1970). ஆரம்பம் முதலே, அவர் பாடிய பல பாடல்கள் மிகுவும் அருமையாக இருந்தது. இதனால் எஸ்.டி பர்மன், கிஷோரின் குரல் ‘ஒரு அருட்கொடை’ என்றே நம்பி வந்தார். இந்தித் திரைப்பட உலகின் சூப்பர்ஸ்டாராக மாறிப்போன கிஷோர் குமார், வரிசையாக பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார். 1960 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், கிஷோர் குமார் சில காரணங்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1969  ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பல வெற்றிப் பாடல்களைத் தந்து, இந்தி இசை உலகில் பெரும் சாதனையைப் படைத்தார் எனலாம். ‘யே ஷாம் மஸ்தாணி’ (கடீபதங் 1970),  ‘சிங்காரி கோயி படகே’ (அமர் பிரேம் 1970),  ‘மேரே தில் மே ஆஜ் க்யா ஹை’ (தாக் 1972),  ‘ஹமேன் தும்ஸே பியார் கித்னா’ (ஹீத்ரத் 1980), ‘அரே தீவானோ’ (டான்), ‘தில் பர் மேரே’ (சத்தே பே சத்தா), ‘சல்தே சல்தே மேரே யே கீத்’ (சல்தே சல்தே),  ‘காதா ரஹே மேரா தில்’ (கைட்), ‘மேரே சாம்னே வாலி’ (படோசன்), ‘ஏக் லடுக்கி பீகி பாகி சி’ (சல்தி க நாம்) ‘ரூப் தேரா மஸ்தானா’, இது தவிர இன்னும் ஏரளாமான பாடல்கள் உள்ளன. அந்தக் காலக்கட்டத்தில் ராஜேஷ் கண்ணா, அமிதா பச்சன், சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, ஜீட்டேந்திரா, தேவ் ஆனந்த், மிதுன் சக்ரவர்த்தி, சஞ்சய் தத்,  அணில் கபூர், திலிப் குமார், கோவிந்தா மற்றும் பல நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியராக கிஷோர் குமார்:  

1961ல் “ஜும்ரு” என்ற திரைப்படத்தை, தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளியிட்ட கிஷோர் குமார், அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், எல்லாப் பாடல்களையும் அவரே எழுதியும் நடித்தும் இருந்தார். பின்னர், 1964ல் “டோர் காகன் கி ச்ஹாவ்ன் மெயின்”, 1971ல் “டோர் கா ரஹி” மற்றும்  1980ல் “டோர் வாடியோன் கஹின்” போன்ற திரைப்படங்கள் இசையமைத்து வெளியிட்டார். ஒரு நடிகர் மற்றும் பாடகராக மட்டுமல்லாமல், இயக்குனராக, பாடலாசிரியராக மற்றும் இசையமைப்பாளராக ஒரு பன்முகம் கொண்ட கலைஞனாகவும் தன்னை வெளிபடுத்தினார்.

இறப்பு:

காலத்தை வென்ற இசை மேதை, தன் இசைக் குரலால் இன்னும் இசை ரசிகர்களை கட்டிபோட்டிருக்கும் கிஷோர் குமார், அக்டோபர் 13, 1987 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஐம்பதுகளில் நடிகராகவும், பாடகராகவும் அறுபதுகளில் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என மாபெரும் கலைஞனாக விளங்கிய கிஷோர் குமார், என்றென்றும் இசை ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருகிறார் என்றால் அது மிகையாகது.

விருதுகள்:

  • 1970 ல் “ரூப் தேரா மஸ்தானா” (ஆராதனா) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • 1971 ல் “ஆராதனா”வில் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான “பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருது” பெற்றார்.
  • 1972 ல் “அந்தாஸ்” திரைப்படத்திற்கான சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான  “பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருது” பெற்றார்.
  • 1973ல் “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான  “பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருது” வழங்கப்பட்டது.
  • 1976 ல் “தில் ஐசா கிசினே மேரா தோட” (அமானுஸ்) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • 1979 ல் “ஓ கைய்கே பான் பனாரஸ்வாலா” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • 1981 ல் “ஹசர் ரஹேன் ரஹெங் முத்கே தேக்ஹின்” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • 1983 ல் “பக் க்ஹுங்க்ரூ பந்த்” (நமக் ஹலால்) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • 1984 ல் “அகர் தும் ந ஹோத்தே” (அகர் தும் ந ஹோதே) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • 1985 ல் “மன்ஜிளின் அப்னி ஜாக” (ஷராபி) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • 1986 ல் “சாகர் கினரே” (சாகர்) என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.