மம்முட்டி

Mammootty

‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘மம்முட்டி’, ஒரு புகழ்பெற்ற மலையாள நடிகராவார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” மூன்று முறையும், கேரள அரசின் விருதை  மூன்று முறைக்கு மேலும், ஏழு முறைக்கும் மேல் ‘ஃபிலிம்பேர் விருதையும், மத்திய அரசின் “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்று, மலையாள திரையுலகின் மாபெரும் நடிகனாக விளங்குகிறார். மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும்  விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 07, 1951

இடம்: செம்பு (கோட்டயம் மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா

பணி: மலையாள திரைப்பட நடிகர்.

நாட்டுரிமை: இந்தியா

 பிறப்பு:

மம்முட்டி அவர்கள், 1951  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7  ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்பு என்ற இடத்தில் இஸ்மாயில் என்பவருக்கும், பாத்திமாவுக்கும் மகனாக ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் முகமது குட்டி.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

1960 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருடைய குடும்பம் எர்ணாகுளம் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தது. தன்னுடைய ஆரம்ப கல்வியை புனித ஆல்பர்ட்ஸ் பள்ளி மற்றும் எர்ணாகுளம் அரசுப் பள்ளியில் முடித்த அவர், கொச்சியிலுள்ள மகராஜாஸ் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடங்கினார். பின்னர், எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லுரியில் சட்டம் பயின்ற அவர், மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் சட்டப்பயிற்சியும் மேற்கொண்டார்.

திரைப்பட வாழ்க்கை:

தன்னுடைய கல்லூரிப் பருவத்திலேயே நடிக்கத் தொடங்கிய மம்முட்டி அவர்கள்,  1971ல் “அனுபவங்கள் பாலிச்சகள்” மற்றும் “காலச்சக்கரம்” போன்ற திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்த கதாபாத்திரங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. பிறகு, எம்.டி. வாசுதேவன் இயக்கத்தில் “தேவலோகம்” என்ற திரைப்படத்தில் ஒரு முன்னணி கதாபத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் பல காரணங்களால் வெளியிடப்படவில்லை.

1980 ஆம் ஆண்டு எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த “வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள்” திரைப்படம், இவருக்கு ஒரு பெரிய தொடக்கமாக இருந்தது எனலாம். பின்னர் ‘மேலா’, ‘திருஸ்னா’ போன்ற திரைப்படங்கள் அவருக்கு மலையாளத் திரைப்பட உலகில் ஒரு கதாநாயன் அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது. அதன் பிறகு, இவர் ஏற்று நடித்த கதாபத்திரங்களும், திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல், இவருக்கு திரைப்படப் துறையில் பெரும் புகழும் பெற்றுத்தந்தது. ‘அஹிம்சா’, ‘யவனிகா’, ‘கூடேவிதே’, ‘ஆ ராத்திரி’, ‘ஆள்கூட்டத்தில் தனியே’, ‘ஆதியொழுக்குகள்’, ‘யாத்திரா’, ‘நிறக்கூட்டு’, ‘தனியாவர்தனம்’, ‘நியூ டெல்லி’, ‘சிபிஐ டைரி குறிப்பு’, ‘ஜகார்த்தா’, ‘சேதுராம ஐயர் சிபிஐ’, ‘நேரரியன் சிபிஐ’, ‘அக்ஷரங்கள்’, ‘சுக்ரதம்’ போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றத் தந்தது.

தேசிய விருதுகள்:

1989 ஆம் ஆண்டு, டி. ஹரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த “வடக்கன் வீரக்கதா” மற்றும் 1990 ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த “மதிலுகள்” திரைப்படம் மம்முட்டியின் திரைப்பட வாழ்கையில் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றத் தந்தது எனலாம். இந்திய திரைப்படத்துறையில் உயர்ந்த விருதான “தேசிய விருதை” இவ்விரண்டு திரைப்படங்களும் அவருக்கு பெற்றுத்தந்தன. பிறகு, 1994 ஆம் ஆண்டு வெளிவந்த “பொந்தன் மாடா” மற்றும் ‘விதேயன்’ திரைப்படங்கள் இரண்டாவது “தேசிய விருதையும்” மற்றும் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த “டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார்” திரைப்படம் மூன்றாவது தேசிய விருதையும் இவருக்கு பெற்றுத்தந்தது. மேலும் ‘முருகயா’, ‘மஹாயனம்’, ‘அமரம்’, ‘வாட்சல்யம்’, ‘ராஜமாணிக்கம்’, ‘மாயாவி’ போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் அவருக்குப் பெற்றுத்தந்தன.

பிறமொழித் திரைப்படங்கள்:

மம்முட்டி அவர்கள், மலையாள திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1989ல் கே.மது இயக்கத்தில் வெளிவந்த “மௌனம் சம்மதம்” என்ற திரைப்படத்தில் முதன் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், பல படங்களில் தன்னுடைய நடிப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சிலும் இடம்பிடித்தார். ‘அழகன்’, ‘தளபதி’, ‘கிளி பேச்சு கேட்கவா’, ‘அரசியல்’, ‘ஆனந்தம்’, ‘எதிரும் புதிரும்’, ‘கார்மேகம்’, ‘ஜாக்பாட்’, ‘மக்கள் ஆட்சி’, ‘மறுமலர்ச்சி’, ‘ராஜா போக்கிரி ராஜா’, ‘விஷ்வ துளசி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பழசி ராஜா’ போன்றவை மம்முட்டி நடித்த தமிழ் திரைப்படங்கள் ஆகும். “திரியத்திரி” என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான அவர், 2000 ஆம் ஆண்டு வெளிவந்த “டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார்” என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய அளவிலான பேரையும், புகழையும் அடைந்தார் எனலாம்.

சமூகப்பணிகள்:

மம்முட்டி அவர்கள், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஒரு நல்ல மனிதன் தான் என்பதை பல சமூக பணிகளில் மூலம் நிருபித்துள்ளார். கேரளாவிலுள்ள “பெயின் அண்ட் பல்லியேடிவ் கேர் சொசைட்டி” அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார். இந்த அமைப்பு வலி மற்றும் நோய்ப் தணிப்பு கவனிப்பு மையமாக செயல்படுகிறது. மக்களுக்கு பலவகையான முறையில் நன்மைபயக்கும் “ஜீவன் ஜோதியில்” தூதராக இருக்கிறார். குழந்தைகள் நலனை பாதுகாக்கும் “இந்திய தெருமுனை இயக்கத்தில்” நல்லெண்ணத் தூதராக இருக்கிறார். “காழ்ச்சா இலவச கண் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை” அமைப்பின் மூலமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், பல சமூக அமைப்புகள் மூலமாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

பிறப்பணிகள்:

“அக்க்ஷயா தகவல் தொழில்நுட்ப விரிவாக்க திட்டத்தில்” நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். ‘சேனல் வீ’, ‘கைராலி டிவி’ மற்றும் ‘பீப்பிள் டிவி’ போன்றவற்றில் மலையாள தகவல் தொடர்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டு “சவுத் இந்தியன் பேங்கின்” உலகளாவிய வணிக தூதராக நியமிக்கப்பட்டார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்:

  • 1994 ஆம் ஆண்டு “பொந்தன் மாடா” மற்றும் “விதேயன்” என்ற திரைப்படங்களுக்காக “தேசிய விருது” வழங்கப்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு வெளிவந்த “டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார்” திரைப்படம் மூன்றாவது தேசிய விருதையும் இவருக்கு பெற்றுத்தந்தது.
  • ‘ஆதியொழுக்குகள்’ (1984),  ‘யாத்ரா’ (1985), ‘மதிலுகள்’ (1990),  ‘அமரம்’ (1991), ‘பூதக்கண்ணாடி’ (1997),  ‘ஆர்யன்னகலுடேவீடு’ (2001),  ‘காழ்ச்சா’ (2004),  ‘கருத்த பக்சிகள்’ (2006) போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • ‘அஹிம்சா’ (1981),  ‘ஆதியொழுக்குகள்’ (1984),  ‘யாத்ரா’ (1985), ‘நிறக்கூட்டு’ (1985),  ‘ஒருவடக்கன்’ (1989), ‘வீரக்காத’ (1989), ‘மரிகயா’ (1989), ‘மகாயனம்’ (1989), ‘விதேயன்’ (1993), ‘பொந்தன் மடா’ (1993), ‘வால்சல்யம்’ (1993), ‘காழ்ச்சா’ (2004),  போன்ற திரைப்படங்களுக்காக “கேரள மாநில திரைப்பட விருதுகள்” வழங்கப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டு கேரளா பல்கலைகழகம் மற்றும் கோழிகோடு பல்கலைக்கழகங்கள் இவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
  • ‘யவனிகா’(1982), ‘சுக்ருதம்’(1994),  ‘பூதக்கண்ணாடி’ (1997) போன்ற திரைப்படங்களுக்காக “கேரள ஃபிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன்” விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும் பல திரைப்படங்களுக்காக “திரைப்பட விமர்சன விருதுகள்”, “வனித்த விருதுகள்”, “ஏசியாநெட் திரைப்பட விருதுகள்” என பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

தன்னுடைய நடிப்புத் திறமையால் பல விருதுகளைப் பெற்று, கேரளத் திரைப்பட உலகின் தலைசிறந்த நடிகனாக விளங்கிய மம்மூட்டி அவர், ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் பல மறுவாழ்வு அமைப்புகளின் மூலமாக நிறைய உதவிகளை வழங்கி, நிஜ வாழ்கையில் ஒரு சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையாகது!!!