எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார்

S-Srinivasa-Iyengar

சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் புகழ்பெற்ற இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சிறந்த அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாண வழக்கறிஞராகவும், சட்டமன்ற உறுப்பினராகவுகம், “இந்திய தேசிய காங்கிரஸ்” மற்றும் “சுயராஜ்ஜிய கட்சியின்” தலைவராகவும் பணியாற்றிய அவர், ‘தென்னாட்டு சிங்கம்’ என அனைவராலும் போற்றப்படுகிறார். வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று பல பணிகளை சிறப்பாக செய்த எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 11, 1874

பிறப்பிடம்: ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: வழக்கறிஞர், இந்திய விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி

இறப்பு: மே 19, 1941

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் என அழைக்கப்படும் சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்கள், 1874  ஆம் ஆண்டு செப்டம்பர் 11  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “ராமநாதபுரம்” மாவட்டத்தில் வைணவ பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

மதுரையில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த அவர், பின்னர் சென்னையிலுள்ள “ப்ரெசிடென்சி கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று, மிக விரைவில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். பிறகு 1912ல், மெட்ராஸ் பார் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 1916 ஆம் ஆண்டு மிக இளம் வயதிலேயே சென்னை மாகாண வழக்கறிஞராக பொறுப்பேற்றார். மேலும் 1912 முதல் 1916 வரை சென்னை மாகாண செனட் உறுப்பினராகவும் பணியாற்றினார். பின்னர் 1916ல் “சென்னை ஆளுநர் நிர்வாக சபை” சட்ட உறுப்பினராகவும் பரிந்துரைக்கப்பட்ட ஸ்ரீநிவாச அய்யங்கார் 1920 வரை பணியாற்றினார்.

விடுதலைப் போரில் அவரின் பங்கு

1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்தக் கொடூரமான படுகொலை, எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய பதவியை ராஜனாமா செய்துவிட்டு, 1920 ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணையவும் செய்தது. மகாத்மா காந்தியின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர்,  பிரித்தானிய இந்தியாவில் காலனி அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரசால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்.

அரசியல் வாழ்க்கை

1923 ஆம் ஆண்டு காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் காங்கிரஸில் இருந்தபடியே ஜவர்ஹலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் போன்றவர்கள் தலைமையில் “சுயராஜ்யக் கட்சியினை” தொடங்கினார். அந்த சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஸ்ரீநிவாச அய்யங்கார் நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை மாகாண “சுயராஜ்யக் கட்சியின்” தலைவராக பொறுப்பேற்றார். இக்கட்சி 1926 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பாண்மை இடங்களில் வெற்றிப்பெற்று ஒரு பெரிய கட்சியாக உருவெடுத்தது. பிறகு 1928 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த சைமன் குழுவை (சைமன் குழு என்பது 1919 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்று கண்டறிய ஆங்கில ஆட்சியாளர்களால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு குழு) சுயராஜ்யக் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் புறக்கணிக்க முடிவுசெய்தது. இது மட்டுமல்லாமல், அதனை எதிர்த்துப் போராட்டங்களும் நடத்தினர். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியை நீக்குவதற்காக 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “இந்திய சுதந்திர லீக்” அமைப்பில் உறுப்பினராகவும் சேர்ந்தார்.

இறுதிகாலம்

1930 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸில் பலபேர் “டொமினியன் அந்தஸ்து” (டொமினியன் அந்தஸ்து என்பது ஆங்கில மேலாதிக்கத்திற்கு உட்பட்ட சுயாட்சி ஆகும்) பெற்றால் போதும் என எண்ணினார். ஆனால் முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என கொள்கையாகக் கொண்ட எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் 1930 ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இறப்பு

இறுதிவரை சுயராஜ்யமே மட்டுமே கொள்கையாக கொண்டு வாழ்ந்து வந்த சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்கள், 1941 ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் தன்னுடைய 66 வது வயதில் சென்னையிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.

காலவரிசை

1874 – செப்டம்பர் 11 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “ராமநாதபுரம்” மாவட்டத்தில் பிறந்தார்.

1912 – “மெட்ராஸ் பார் கவுன்சில் உறுப்பினராக” நியமிக்கப்பட்டார்.

1916 – சென்னை மாகாண வழக்கறிஞராக பொறுபேற்றார்.

1912-16 – சென்னை மாகாண செனட் உறுப்பினராக பணியாற்றினார்.

1916-20 – “சென்னை ஆளுநர் நிர்வாக சபை” சட்ட உறுப்பினராக பணியாற்றினார்.

1920 – இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

1928 – இந்தியா வந்த “சைமன் குழுவிற்கு” எதிர்ப்புத் தெரிவித்தார்.

1928 – “இந்திய சுதந்திர லீக்” அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார்.

1941 – மே 19ஆம் நாள் 66 வது வயதில் சென்னையில் காலமானார்.