வைரமுத்து
ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் பாடல்கள் என்றாலோ, கவிதைகள் என்றாலோ, ஹைக்கூ என்றாலோ நினைவுக்கு வருபவர் ‘கவியரசு வைரமுத்து’ அவர்களே. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர், சிறந்த பாடலாசிரியருக்காக ‘ஆறு முறை தேசிய விருதும்’, ‘கலைமாமணி விருதும்’, ‘பத்மஸ்ரீ விருதும்’ பெற்ற இந்திய தமிழ்க் கவிஞர். ‘கவியரசு’ என்றும், ‘கவிப்பேரரசு’ என்றும், ‘காப்பியப்பேரறிஞர்’ என்றும், ‘காப்பியசாம்ராட்’ என்றும் பட்டங்கள் பெற்ற வைரமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜூலை 13, 1953
பிறந்த இடம்: வடுகபட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தொழில்: கவிஞர், பாடலாசிரியர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
வைரமுத்து அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் (பெரியகுளம் அருகில் உள்ளது) ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் ராமசாமி தேவருக்கும், அங்கம்மாளுக்கும் மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்
தன்னுடைய இளமைப் பருவத்தில் அண்ணாவின் இனிமையான தமிழ் நடையாலும், பெரியாரின் சிந்தனைகளாலும், கருணாநிதியின் இலக்கியத் தமிழாலும் கவரப்பட்டு, பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் அவர்களின் கவிதை நடையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், மேலும் தனது கிராமத்தின் சுற்றுப்புறச்சூழலும் அவரைத் தனது பன்னிரெண்டாவது வயதிலேயே கவிதை எழுத ஊக்குவித்தது. திருவள்ளுவரின் திருக்குறளால் கவரப்பட்ட அவர், தனது பதினான்காவது வயதிலேயே, தமிழ் செய்யுளின் யாப்பின் சொல் இலக்கண விதிகளைக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிலும் சிறந்து விளங்கிய அவர், தனது உயர்கல்விப் படிப்பில் மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, அதற்காக வெள்ளிப்பதக்கமும் வென்றார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், தமிழில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெறுவதற்காக, அவர் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி நாட்களில், அவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு, சிறந்த பேச்சாளர் மற்றும் கவிஞருக்காக 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றார். கல்லூரியின் இரண்டாவது ஆண்டில், அவருக்கு பத்தொன்பது வயதிருக்கும் போது, ‘வைகறை மேகங்கள்’ என்ற முதல் பாடல் திரட்டை வெளியிட்டார். அவரது இந்தப் படைப்பானது, சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது படைப்பு பாடத்திட்டத்தில் வந்ததால், ஒரு மாணவக் கவிஞராக அவர் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், முதுகலைத் (எம்.ஏ) தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றார். 1979ல், அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ என்ற படைப்பை வெளியிட்டார்.
திரையுலக வாழ்க்கை
1978 ஆம் ஆண்டு பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும். பின்னர், அவர் ‘நினைவெல்லாம் நித்யா’ (1982), ‘முதல் மரியாதை’ (1985), ‘புன்னகை மன்னன்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புதிய முகம்’ (1993), ‘ஜென்டில்மேன்’ (1993), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1994), ‘காதலன்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘டூயட்’ (1994), ‘முத்து’ (1995), ‘இந்திரா’ (1995), ‘பாட்ஷா’ (1995), ‘இந்தியன்’ (1996), ‘இருவர்’ (1997), ‘நிலாவே வா’ (1998), ‘காதல் மன்னன்’ (1998), ‘ஜீன்ஸ்’ (1998), ‘துள்ளாத மனமும் துள்ளும்’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆடுகளம்’ (1999), ‘முதல்வன்’ (1999), ‘படையப்பா’ (1999), ‘சங்கமம்’ (1999), ‘ஜோடி’ (1999), ‘குஷி’ (2000), ‘ரிதம்’ (2000), ‘ஆளவந்தான்’ (2000), ‘முகவரி’ (2000), ‘அலைபாயுதே’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘பார்த்தேன் ரசித்தேன்’ (2000), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘மஜ்னு’ (2001), ‘ஷாஜகான்’ (2001), ‘சிடிசன்’ (2001), ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002), ‘வில்லன்’ (2002), ‘ஜெமினி’ (2002), ‘அன்பே சிவம்’ (2003), ‘இயற்கை’ (2003), ‘செல்லமே’ (2004), ‘அட்டஹாசம்’ (2004), ‘ஆயுத எழுத்து’ (2004), ‘வசூல் ராஜா MBBS’ (2004), ‘உள்ளம் கேட்குமே’ (2005), ‘வரலாறு (2006), ‘அந்நியன்’ (2006), ‘சிவாஜி: தி பாஸ்’ (2007), ‘மொழி’ (2007), ‘குரு’ (2007), ‘தசாவதாரம்’ (2008), ‘அசல்’ (2009), ‘மோதி விளையாடு’ (2009), ‘சிவப்பு மழை’ (2009), ‘ஆனந்த தாண்டவம்’ (2009), ‘அயன் (2009)’, ‘எந்திரன் (2010)’, ‘ராவணன்’ (2010), ‘வாகை சூட வா’ (2011), ‘யமுனா’ (2012), ‘நீர்ப்பறவை’ (2012), மற்றும் ‘கடல்’ (2013).
அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்குப் புகழ் பெற்றுத்தந்தாலும், ‘பூங்காற்று திரும்புமா’ – ‘முதல் மரியாதை’ (1985), ‘சின்ன சின்ன ஆசை’ – ‘ரோஜா’ (1993), ‘போறாளே பொன்னுத்தாயி’ – ‘கருத்தம்மா’ (1995), ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ – ‘சங்கமம்’ (2000), ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ – ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) மற்றும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ – ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) போன்ற பாடல்கள் அவருக்கு தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல், அவருக்குப் பெரும் புகழையும் தேடித்தந்தது.
வைரமுத்துவின் படைப்புகள்
தமிழ்மொழியின் மீது அளவற்றப் பற்றுக் கொண்ட அவர், திரைப்படங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். அவரது படைப்புகளில் சில
நாவல்கள் – ‘வில்லோடு வா நிலவே’, ‘தண்ணீர் தேசம்’, ‘வானம் தொட்டுவிடும்’, ‘தூரம்தான்’, ‘கருவாச்சி காவியம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, மற்றும் ‘மூன்றாம் உலகப் போர்’
கவிப் பேரரசு அவர்களின் உலகப் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள் – ‘வைகறை மேகங்கள்’, ‘சிகரங்களை நோக்கி’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘தமிழுக்கு நிறமுண்டு’, ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’, ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’, ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும், ‘இதுவரை நான்’, ‘கொஞ்சம் தேனீர் நிறைய வானம்’, ‘பெய்யென பெய்யும் மழை’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘’ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்’, மற்றும் ‘ஒரு மெளனத்தின் சப்தங்கள்’.
நூல்கள் – ‘கள்ளிகாட்டு இதிகாசம்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும்’, ‘இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல’, ‘இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்’, ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’, ‘காவி நிறத்தில் ஒரு காதல்’, ‘என் பழைய பனை ஓலைகள்’, ‘இன்னொரு தேசிய கீதம்’, ‘வைகறை மேகங்கள்’, ‘ரத்ததானம்’, ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’, ‘எல்லா நதியுளும் என் ஓடம்’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘கவிராஜன் கதை’, ‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்’, ‘தண்ணீர் தேசம்’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘தமிழுக்கு நிறம் உண்டு’, ‘மீண்டும் என் தொட்டிலுக்கு’, ‘கொடிமரத்தின் வேர்கள்’, ‘வில்லோடு வா நிலவே’, ‘என் ஜன்னலின் வழியே’, ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’, ‘கல்வெட்டுகள்’, ‘கேள்விகளால் ஒரு வேள்வி’, ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’, ‘வடுகபட்டி முதல் வல்கா வரை’, ‘பெய்யென பெய்யும் மழை’, ‘இதுவரை நான்’, ‘ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும்’, ‘பாற்கடல்’ மற்றும் ‘கருவாச்சி காவியம்’.
விருதுகளும், அங்கீகாரங்களும்
1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1995ல் ‘கருத்தம்மா’ படத்திற்காகவும், 1996ல் ‘முத்து’ மற்றும் ‘பம்பாய்’ படங்களுக்காகவும், 2000ல் ‘சங்கமம்’ படத்திற்காகவும், 2006ல் ‘அந்நியன்’ படத்திற்காகவும், 2008ல் ‘பெரியார்’ படத்திற்காகவும் தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றார்.
1986ல் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது.
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
1986 ல் ‘முதல் மரியாதை’ (1985) படத்திலிருந்து வரும் ‘பூங்காற்று திரும்புமா’ என்ற பாடலுக்காகவும், 1993ல் ‘ரோஜா’ (1993) படத்திலிருந்து வரும் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலுக்காகவும், 1995ல், ‘கருத்தம்மா’ (1995) படத்திலிருந்து வரும் ‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற பாடலுக்காகவும், ‘பவித்ரா’ படத்திலிருந்து வரும் ‘உயிரும் நீயே’ என்ற பாடலுக்காகவும், 2000ல், ‘சங்கமம்’ (2000) படத்திலிருந்து வரும் ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) படத்திலிருந்து வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலுக்காகவும், 2011ல், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) படத்திலிருந்து வரும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்ற பாடலுக்காகவும் ஆறு முறை தேசிய விருதுகளை வென்றார்.
காலவரிசை
- 1953: தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் பிறந்தார்.
- 1979: அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ வெளியிடப்பட்டது.
- 1978: பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
- 1986ல் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது.
- 2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
he is my teacher
i love vairamuthu sir very much
ONE AND ONLY SUPER HERO IS VAIRAMUTHU…..
nan ungalin periya rasikan. ungalin paadalkal anaithum enaku migavum pidikum.
kavingare,,,,,,,, neengal tamilarkalin adayalam